செய்யாறு அருகே மின்னல் தாக்கி இளம் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு


பலியானவர்கள்

திருவண்ணாமலை: செய்யாறு அருகே மின்னல் தாக்கியதில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் சுற்றுப் பகுதிகளில் நேற்று (ஜூன் 06) இரவு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அப்போது செய்யாறு அடுத்த பாப்பாந்தாங்கல் கிராமம் கே.கே நகரில் வசித்த ஞானவேல் மகள் மோனிஷா (வயது 20) தனது வீட்டின் வெளியே காயவைக்கப்பட்டிருந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி சுருண்டு விழுந்தார்.

அவரை மீட்ட குடும்பத்தினர் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மோனிஷாவை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். டிப்ளமோ நர்சிங் படித்துள்ள மோனிஷாவுக்கு ஒருவாரத்தில் திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், வெம்பாக்கம் அடுத்த ஆரப்பாக்கம் பகுதியில் மின்னல் தாக்கியதில் லாரி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறுவஞ்சிப்பட்டு கிராமத்தில் வசித்த ராமராஜ், லாரி ஓட்டிச் சென்ற போது, கைபேசியை பயன்படுத்தியதாகவும், இதனால் மின்னல் தாக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் ராமராஜ் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தூசி காவல்துறையினர் தனித் தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.