மக்களவை தேர்தல் நடைமுறைகள் நிறைவு; நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டன: அரசு வழக்கமான பணிகளை தொடரலாம்


சென்னை: தமிழகத்தில் கடந்த மார்ச் 16-ம் தேதி அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள், தேர்தல் நடைமுறைகள் முடிவுற்றதால் நேற்று நள்ளிரவு முதல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்தியாவின் 18-வது மக்களவைக்கான பொதுத்தேர்தல் அறிவிப்பை கடந்த மார்ச் 16-ம் தேதி, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வெளியிட்டார். அப்போது இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தொடர்ந்து கடந்த ஏப்ரல் 19- ம் தேதி முதல் 7 கட்டங்களாக கடந்த ஜூன் 1-ம் தேதி வரை தேர்தல் நடத்தப்பட்டது.

கடந்த ஜூன் 4-ம் தேதி தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்தல் நடைமுறைகள் முடிவுறும் நிலையில் ஜூன் 6-ம் தேதியுடன் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று நள்ளிரவுடன் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.

முன்னதாக, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவிடம் இதுகுறித்து கேட்டபோது, “தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 வரை நடைமுறையில் இருக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில், வேறு எந்த உத்தரவும் வராததால், விதிகள் விலக்கிக் கொள்ளப்படும்” என்றார்.

முன்னதாக, தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக ஒருவர் ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக பணம் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அதிக மதிப்புள்ள பொருட்கள் கொண்டு செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வருமான வரித்துறையினரின் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில், தேர்தல் நடைமுறைகள் நேற்று நள்ளிரவுடன் திரும்ப பெறப்பட்டன. இனி பணம், பொருட்கள் கொண்டு செல்வதில் எந்தவித கட்டுப்பாடும் இருக்காது. அதுமட்டுமின்றி, அரசு வழக்கமான பணிகளை இன்று முதல் மேற்கொள்ளலாம். புதிய திட்டங்கள் அறிவிப்பது, நிதி உதவி அறிவிப்பது, திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வழிவகை ஏற்பட்டுள்ளது.

x