தூக்கிடுவதுபோல நாடகமாடிய பெண் கழுத்து இறுக்கி உயிரிழப்பு


திருச்சி: திருச்சியில் மகனை மிரட்டுவதற்காக தூக்கிடுவதுபோல நாடகமாடிய பெண், கழுத்து இறுக்கி உயிரிழந்தார்.

திருச்சி மேல கல்கண்டார்கோட்டை சஞ்சீவி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். பால் வியாபாரி. இவரது மனைவி பழனியம்மாள்(39). இவர்களது மகன் லெனின்(17). செல்போன் வாங்கித் தருமாறு தாய் பழனியம்மாளிடம் லெனின் தகராறு செய்து வந்துள்ளார். இதையடுத்து, மகன் லெனினை மிரட்டுவதற்காக நேற்று முன்தினம் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டிக்கொள்வதுபோல பழனியம்மாள் நாடகமாடினார். ஆனால், எதிர்பாராதவிதமாக பழனியம்மாளின் கழுத்தை சேலை இறுக்கியது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மகன் மற்றும் அக்கம்பக்கத்தினர் பழனியம்மாளை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பழனியம்மாள், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பொன்மலை போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.