திருப்பூரில் கே.சுப்பராயன் மீண்டும் வெற்றி: உறுதுணைபுரிந்த திருப்பூர் வடக்கு, தெற்கு தொகுதிகள்!


திருப்பூர் மக்களவை தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கே .சுப்பராயனுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கிய மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும். ஆட்சியருமான தா.கிறிஸ்துராஜ். உடன், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாத ன், எம்.எல்.ஏ. க.செல்வராஜ் உள்ளிட்டோர்.

திருப்பூர்: கடந்த முறை பெற்ற வாக்குகளை காட்டிலும், மிக அதிக வாக்குகளை பெற்று, திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். திருப்பூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுகவிடம் 4-ம், திமுக வசம் 2 தொகுதிகளும் உள்ளன.

இந்நிலையில், திருப்பூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட அருணாச்சலத்துக்கு கட்சியின் பொதுச் செயலாளர் கே.பழனிசாமி வாய்ப்பளித்தார். பேரூராட்சி கவுன்சிலராக இருந்த அருணாச்சலம், பெரும் நம்பிக்கையோடு களம் இறங்கினார்.

திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த திருப்பூர் சிட்டிங் எம்.பி. கே.சுப்பராயன் மீது, பல்வேறு அதிருப்திகள் தொகுதிக்குள் இருந்தாலும், அவற்றை கடந்து இந்த முறை அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்கின்றனர் அரசியல் கட்சியினர்.

அதற்கு முக்கிய காரணம், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பலம், அவருக்கு வலுவாக கை கொடுத்துள்ளது. கடந்த முறை கே.சுப்பராயன் 5 லட்சத்து 725 வாக்குகள் பெற்றார். அதிமுகவின் எம்.எஸ்.எம்.ஆனந்தனை விட 93 ஆயிரத்து 368 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையின்போது, 16-வது சுற்றில் கடந்த முறை முன்னிலை பெற்ற வாக்குகளை கடந்து, 96 ஆயிரத்து 124 வாக்குகள் முன்னிலை பெற்று தொடர்ந்து முதலிடத்தில் நீடித்தார். கூட்டணி கட்சியினர் முழு ஆதரவை தந்திருப்பதால், இம்முறை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தை எளிதாக தொட்டுவிட்டார்.

சுமார் 75 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகள் முக்கிய காரணமாக அமைந்தன. 17-வது சுற்றில் ஒரு லட்சம் வாக்குகளை கடந்தார். தொடர்ந்து 28 சுற்றுகளின் முடிவில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதைத்தொடர்ந்து திருப்பூர் மக்களவை தொகுதி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட கே.சுப்பராயனுக்கு, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தா.கிறிஸ்துராஜ் வெற்றி சான்றிதழை வழங்கினார்.

தேர்தல் பொது பார்வையாளர் ஹிமான்சு குப்தா, வாக்கு எண்ணிக்கை பார்வையாளர் ஓம்பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர். செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.காமராஜ், காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் ஆர்.கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கே.சுப்பராயன் கூறும்போது, ‘‘தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு பொய் என்பதை, இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. ‘இண்டியா’ கூட்டணி ஆட்சி அமைக்கும். ஜனநாயகத்தை பாதுகாக்க இண்டியா கூட்டணி பாடுபடும். சமபலத்துடன் நாங்கள் உள்ளோம்.

அரசியல் சட்டங்களை பாஜகவால் இனி மாற்ற முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்த அரசியல், சமூகம் மற்றும் பொருளாதார சீரழிவுகளை, இண்டியா கூட்டணி மீட்டெடுக்கும். கடந்த 5 ஆண்டு காலத்தில் நான் எதுவும் செய்யவில்லை என்பதை, இந்த வெற்றி மூலமாக மக்கள் நிராகரித்துள்ளனர்’’ என்றார்.

11 பேர் டெபாசிட் இழப்பு: திருப்பூர் மக்களவை தொகுதியில் தபால் வாக்குகள் 183 உட்பட 17 ஆயிரத்து 737 வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்துள்ளன. கடந்த மக்களவை தேர்தலில் 21 ஆயிரத்து 861 வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், தற்போது அதிமுகவின் அருணாச்சலம் தவிர, பாஜக, நாம் தமிழர் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் உட்பட 11 பேர் டெபாசிட் இழந்துள்ளனர்.

x