“நாகரிக அரசியலுக்கு கிடைத்த வெற்றி” - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கருத்து


கோவை: வெறுப்பு அரசியலை விரட்டி, நாகரிக அரசியலுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறோம் என, தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாதெரிவித்தார். கோவை மக்களவை தொகுதியின் திமுக கூட்டணி தேர்தல்பொறுப்பாளரான அமைச்சர்டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று வருகிறார்.

திமுக தலைவரின் திராவிட மாடல் ஆட்சிக்கும் அவரின் அயராத மக்கள் பணிக்கும், நாகரிக அரசியலுக்கும், திறமைக்கும், உழைப்புக்கும் இன்று தமிழகமக்கள் 40 மக்களவை தொகுதிகளில் வெற்றியை வழங்கியுள்ளனர். மிகவும் பெருமையாக உள்ளது. அனைத்து கூட்டணி கட்சியினர் மற்றும் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி.

பாசிசத்திற்கு எதிரான, பிரிவினைவாதத்திற்கு எதிரான, வெறுப்பு அரசியலுக்கு எதிரான வெற்றியை மக்கள் தந்துள்ளனர். இவற்றுக்கெல்லாம் அண்ணா, பெரியார், கலைஞர் பிறந்த மண்ணில் இடமில்லை என மக்கள் உரக்க கூறியுள்ளனர். கோவை இனி மகத்தான வளர்ச்சியை காணும். திமுக தலைவர் தேர்தலின் போது கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயமாக நிறைவேற்றுவார்.

கோவை விமான நிலையம்வளர்ச்சி பெற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கோவையில் 28 ஆண்டுகளுக்கு பின் சூரியன் உதிக்கிறது. தமிழக முதல்வர் நாகரிக அரசியலுக்கு பெயர் பெற்றவர். இந்த வெற்றியை பொறுத்தவரை வெறுப்பு அரசியலை விரட்டி மக்களுக்கு வளர்ச்சிக்கான அரசியலாக தான் பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.