காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஜி.செல்வம் வெற்றி


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜி.செல்வம் 2,21,473 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஜி.செல்வம், அதிமுக சார்பில் இ.ராஜசேகர், பாமக சார்பில் வி.ஜோதி, நாம் தமிழர் கட்சி சார்பில் வி.சந்தோஷ்குமார் ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்த தொகுதியில் மொத்த வாக்குகள் 17,48,000. பதிவானவை 12,53,582. இந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை காஞ்சிபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் பதிவான தபால் வாக்குகளில் திமுக வேட்பாளர் ஜி.செல்வம் 3,066 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் இ.ராஜசேகர் 1,580 வாக்குகளும், பாமக வேட்பாளர் வி.ஜோதி 1,139 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் வி.சந்தோஷ்குமார் 414 வாக்குகளும் பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து 8.30 மணிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் சுற்றில் இருந்த திமுக வேட்பாளர் ஜி.செல்வம் முன்னிலையில் இருந்து வந்தார். முதல் சுற்றில் திமுக வேட்பாளர் செல்வம் 27,662 வாக்குகளை பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக வந்த இ.ராஜசேகர் 17,802 வாக்குகளையே பெற்றார்.

இதுபோல் ஒவ்வொரு சுற்றிலும் திமுக வேட்பாளர் ஜி.செல்வம் முதலிடத்திலும், அதிமுக வேட்பாளர் இ.ராஜசேகர் 2-வது இடத்திலும், பாமக வேட்பாளர் வி.ஜோதி 3-வது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் வி.சந்தோஷ்குமார் 4-வது இடத்திலும் வந்தனர்.

6-வது சுற்றில் திமுக வேட்பாளர் ஜி.செல்வம் தனக்கு அடுத்தபடியாக வந்த அதிமுக வேட்பாளர் ராஜசேகரைவிட 59,525 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார். மொத்தம் 31 சுற்றுகள் உள்ள நிலையில் 6-வது சுற்றிலேயே திமுக வேட்பாளரின் வெற்றி உறுதியான நிலையில் எதிர்க்கட்சி முகவர்கள் வேட்பாளர்கள் சோர்வடைந்தனர்.

20 சுற்றுகளை தாண்டும்போது வாக்கு வித்தியாசம் ஒரு லட்சத்துக்கு மேல் இருந்ததால் பலர் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறினர். 6-வது சுற்றில் திமுக வேட்பாளர் ஜி.செல்வம் 1,58,790 வாக்குகள் பெற்றார்.

இவருக்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் 99,265 வாக்குகள் பெற்றார். பாமக வேட்பாளர் ஜோதி 43,985 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் வி.சந்தோஷ்குமார் 31,929 வாக்குகளும் பெற்றனர்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக வேட்பாளர் ஜி.செல்வம் 5,86,044 வாக்குகள் பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் இ.ராஜசேகர் 3,64,571 வாக்குகளை பெற்றார். மொத்தம் 2,21,473 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஜி.செல்வம் வெற்றி பெற்றார்.

பாமக வேட்பாளர் வி.ஜோதி 1,64,931 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.சந்தோஷ்குமார் 1,10,272 வாக்குகளை பெற்று 4-ம் இடத்தையும் பிடித்தனர்.

பேட்டரி கோளாறு: காஞ்சிபுரம் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. பின்னர் 8.30 மணி அளவில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

அப்போது சில வாக்குப் பதிவு இயந்திரங்களில் பேட்டரி சரிவர வேலை செய்யாததால் அதில் பதிவான வாக்குகளை எண்ண முடியவில்லை. இதனைத் தொடர்ந்து பெல் நிறுவன பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் பேட்டரியை சரி செய்த பிறகே வாக்குகள் எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது முகவர்கள் அமருவதற்கு இடம் இல்லை. கடும் நெரிசல், நெருக்கடி இருந்தது. இதனை தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டாட்சியர் கலைவாணியிடம் முகவர்கள் பலர் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது கோட்டாட்சியர் கலைவாணி ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளிடம் இந்த இடத்தை எல்லாம் காட்டி கருத்துகள் கேட்கப்பட்டன என்றார். இதனைத் தொடர்ந்து முகவர்கள் சமாதானமடைந்தனர்.

x