தெலங்கானாவில் பிஆர்எஸ் படுதோல்வி


ஹைதராபாத்: தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் கடந்த மே 13-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பிஆர்எஸ்கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என முதல்வர் ரேவந்த் ரெட்டி சவால் விடுத்தார். அதையே இப்போதைய தேர்தல் முடிவு உறுதிப்படுத்தியுள்ளது.

தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. எஞ்சிய ஒரு தொகுதியான ஹைதராபாத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இவர், தனக்கு அடுத்து வந்த பாஜக வேட்பாளர் மாதவி லதாவை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

சந்திரசேகர ராவின் பிஆஎஸ் கட்சி வெறும் 3 தொகுதிகளில் மட்டும் 2-ம் இடத்தில் உள்ளது. மற்ற 14 இடங்களிலும் அக்கட்சி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது. இந்த மக்களவை தேர்தல் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே நடந்த தேர்தல் என்பது ஊர்ஜிதமாகி உள்ளது. இதன் மூலம் தெலங்கானாவில் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.