திருவள்ளூர் வாக்கு எண்ணும் மையத்தினுள் போன் எடுத்து செல்ல அனுமதி மறுப்பு: செய்தியாளர்கள் போராட்டம்


பிரதிநிதித்துவப் படம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தினுள் மொபைல் போன் எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் 14,30,738 வாக்குகள் (68.59 சதவீதம்) பதிவாகின. அந்த வாக்குகளை எண்ணும் பணி திருவள்ளூர் அருகே பெருமாள்பட்டுவில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் வேட்பாளர்களின் முகவர்கள் உள்ளிட்டவர்கள் போலீஸாரின் தீவிர பரிசோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கிப்படுகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களை வாக்கு எண்ணும் மையத்துக்குள்ளே செல்வதற்கு முன்பே, செய்தியாளர்கள் யாரும் மொபைல் போனை மையத்தினுள்ளே கொண்டு செல்லக்கூடாது என கூறி போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், போலீஸாருக்கும், செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த வாக்குவாதம் முற்றியதன் விளைவாக, 50-க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் வாக்கு எண்ணும் மையத்தின் நுழை வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகு செய்தியாளர்கள் வாக்கு எண்ணும் மையத்தினுள் மொபைல் போன் கொண்டு செல்ல போலீஸார் அனுமதித்தனர்.