மக்களவை தேர்தல் 2024: ஸ்ரீபெரும்புதூர் வாக்கு எண்ணும் மையத்தில் போதிய வசதிகள் இல்லாத செய்தியாளர்கள் அறை


குரோம்பேட்டை: ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம், குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள செய்தியாளர்கள் அறையில், இருக்கைகள் மட்டுமே போடப்பட்டிருந்தன. போதிய டேபிள்கள் இல்லை. குடிநீர் வசதி முறையாக செய்யப்படவில்லை. ‘பிளக்பாயின்ட்’ வசதிகள் முறையாக செய்யப்படவில்லை.

எந்த வசதியும் இல்லாத அறையில் செய்தி சேகரிக்க முடியாமல் செய்தியாளர்கள் சிரமத்துக்குள்ளாகினர். முன்னதாக, எம்.ஐ.டி., கல்லூரிக்குள் நுழைந்ததும் நுழைவாயிலில் இருந்த காவலர்கள், செய்தியாளர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கையெழுத்து போட்டுக் கொடுத்த பாஸ் காண்பித்தும் உள்ளே அனுமதிக்காமல் செய்தியாளர்களுடன் தகராறு செய்தனர்.

இது குறித்து, மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயலலிதாவிடம் புகார் தெரிவித்தும், அவர் கண்டுக்கொள்ளவில்லை. பின்னர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண் ராஜியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அவர் தலையிட்டு செய்தியாளர்கள் உள்ளே அனுமதிக்க நடவடிக்கை எடுத்தார். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு தேர்தலிலும், செய்தியாளர்கள் அவமதிக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது.