மக்களவைத் தேர்தல் முடிவு 2024: வாக்கு எண்ணும் மையத்திற்குள் டி.ஆர்.பாலு காரில் செல்ல அனுமதி மறுப்பு


படங்கள்: எம் முத்து கணேஷ்

தாம்பரம்: குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரியில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்குள் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு அவரது காருடன் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் நிலையில் குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரியில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம் பகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 600 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடுமையான கெடுபிடிக்கு மத்தியில் முகவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவின் காருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்திற்குள் காருக்கான அனுமதி சீட்டு வைத்திருந்த போதும் எதற்காக அனுமதிக்கவில்லை என கேட்டு அவர் நீண்ட நேரம் காரிலேயே அமர்ந்திருந்தார். ஆனாலும் கார் கல்லூரி வளாகத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர் கல்லூரி வளாகத்தின் முன் பகுதியில் இருந்து வாக்கு எண்ணும் மையம் வரை நடந்து சென்றார்.

பின்னர் இது குறித்து தேர்தல் கண்காணிப்பாளர் அபிசேக் சந்திரா, தேர்தல் நடத்தும் அலுவலரும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருமான அருண்ராஜ் ஆகியோரை டி.ஆர்.பாலு சந்தித்து விவரங்களை எடுத்துக் கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, இதனை தொடர்ந்து அதிகாரிகள் டி.ஆர்.பாலுவை சமாதானம் செய்தனர்.

x