வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும்: ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்


மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. மத்திய சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையமான லயோலா கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன், நேற்று ஆய்வு செய்தார்.

சென்னை: சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில், வாக்கு எண்ணிக்கை நாளன்று பாதுகாக்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் கடந்த ஏப்.19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.சென்னை மாவட்டத்தில் உள்ள வட சென்னை மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், தென் சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் எண்ணப்பட உள்ளன.

இந்த வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணும் பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் அங்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வாக்கு எண்ணும் மையமான குரோம் பேட்டை எம்ஐடி
கல்லூரியில் மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கைக்கு
தயார் நிலையில் உள்ளது. அங்கு பலத்த போலீஸ்
பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. | படம்: எம்.முத்துகணேஷ் |

குறிப்பாக, இந்த மையங்களில் தபால் வாக்குகள் எண்ணும் அறை,மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்குஎண்ணும் பகுதி, ஊடக மையம், குடிநீர் வசதி,கழிப்பறை வசதி, மின் வசதி,அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக் கான உணவு ஏற்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வாகன நிறுத்த இடங்கள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

கோடை காலம் என்பதால் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின்போது, கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வி.ஜெய சந்திர பானு ரெட்டி, ஜி.எஸ்.சமீரன் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எம்.பி.அமித், கே.ஜெ.பிரவீன் குமார், கட்டா ரவி தேஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

x