போக்குவரத்து துறை இணை ஆணையர் பணியிடை நீக்கம்


சென்னை: சென்னை போக்குவரத்துத் துறைஆணையரகத்தில் துணை ஆணையராகப் பணிபுரிந்த நடராஜன் அலுவலகத்தில், கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்காக பணிபுரியும் 30 உதவியாளர்களிடம் தலா ரூ.5 லட்சம் லஞ்சம் பெறுவதாக 2022-ல் புகார் எழுந்தது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அவ்வாண்டு மார்ச் 14-ல் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். துணை ஆணையர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.35 லட்சம் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறி, போக்குவரத்து இணை ஆணையர் டி.வெங்கட்ராமன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான உத்தரவை உள்துறைச் செயலர் பி.அமுதா பிறப்பித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையின்போது வெங்கட்ராமன், போக்குவரத்து துறை இணை ஆணையராக (நிர்வாகம்) பணியாற்றினார். இதையடுத்து அவர் திருச்சி ஸ்ரீரங்கம் செயலாக்கப் பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவர் நேற்றுடன் ஓய்வுபெறவிருந்த நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

x