பாபநாசத்தில் சிறுவன் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கு: தந்தைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் 


பாபநாசம்: பாபநாசத்தில் 18 வயது பூர்த்தி அடையாத சிறுவன் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கில் தந்தைக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாபநாசம் காவல் நிலைய ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் போலீஸார், பாபநாசம் பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பாபநாசம் ரயிலடியை சேர்ந்த முகம்மது தனது மகனை இரு சக்கர வாகனத்தை சாலையில் ஓட்ட அனுமதித்தது தொடர்பாக மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கு பாபநாசம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி, மகனுக்கு இரு சக்கர வாகனத்தை ஓட்டுவதற்கு வழங்கிய தந்தை முகம்மதுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து, வாகன உரிமத்தை ஓராண்டுக்கு ரத்து செய்தும் உத்தரவிட்டார்.