வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது @ பொள்ளாச்சி


பொள்ளாச்சியில் வீட்டில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடி

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த டெய்லரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய போலீஸார் இன்று (மே 31) குள்ளக்காபாளையம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது குள்ளக்காபாளையம் ஜெ.ஜெ.,நகர் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (52). இவர் திருப்பூரில் பனியன் நிறுவனத்தில், டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா செடிகளை வீட்டில் வளர்த்து வந்ததை கண்டறிந்த போலீஸார் வீட்டில் வளர்க்கப்பட்ட 13 கஞ்சா செடிகளை கைப்பற்றினர்.

இதையடுத்து போலீஸார் ஈஸ்வரன் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். இதை இவர் பயன்படுத்துவதற்காக வளர்த்தாரா அல்லது விற்பனை செய்வதற்காக வளர்த்தாரா என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.