நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி புகைப்பட கண்காட்சி: டி.ஆர்.பாலு தொடங்கி வைத்தார்


மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, புகைப்பட நிபுணர் கோவை சுப்புவின் ஏற்பாட்டில், அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நேற்று தொடங்கிய புகைப்பட கண்காட்சியை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. பார்வையிட்டார். அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி எஸ்.முருகன், துறைமுகம் காஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் சிறப்பு புகைப்பட கண்காட்சியை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடங்கி வைத்தார்.

திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மறைந்த மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்தாண்டு ஜூன் 3-ம்தேதி தொடங்கியது. இதை முன்னிட்டு, திமுக சார்பில் பல்வேறுநிகழ்ச்சிகள், நடத்திட்டப் பணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுதவிர, அரசு சார்பிலும் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர, பல்வேறு மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் கருணாநிதி பெயரில் திறக்கப்பட்டு வருகின்றன. வரும் ஜூன் 3-ம் தேதிகருணாநிதி நூற்றாண்டு நிறைவுபெறுகிறது.

இந்நிலையில், கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக, சென்னை அண்ணாஅறிவாலயத்தில் கருணாநிதி நூற்றாண்டு புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

புகைப்பட நிபுணர் கோவை சுப்பு ஏற்பாட்டில், அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நேற்று கருணாநிதியின் வரலாற்றுச் சிறப்புபுகைப்பட கண்காட்சியை பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. தொடங்கி வைத்தார். அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு அணித் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலையசெயலாளர்கள் பூச்சி எஸ்.முருகன்,துறைமுகம் காஜா, துணை அமைப்புச் செயலாளர்கள் ஆஸ்டின், தாயகம் கவி உள்ளிட்டநிர்வாகிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்குப்பின் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு ஜூன் 3-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6-ம் தேதிவரை தமிழகத்திலும், மற்ற மாநிலங்களிலும் உள்ளது. இதனால், 3-ம் தேதி விழாவை தி்ட்டமிட்டபடி பிரமாண்டமாக நடத்த முடியவில்லை.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்தாண்டு கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, திமுகவினர் கருணாநிதி படத்துக்கு மாலை சூட்டி, கொடியேற்றி மகிழ்ச்சியுடன் தொடங்க வேண்டும்என்று தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், இன்றுமுதல் வரும் ஜூன் 3-ம் தேதிவரை பொதுமக்கள் பார்வைக்குஇந்த புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின், 80 ஆண்டுகால அரசியல் வரலாற்றை புகைப்படமாக பார்க்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. கருணாநிதியின் ஆரம்ப காலம் முதல் இறுதி வரையிலான நிகழ்வுகளின் படங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் செய்வதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. இது விதிமீறலா என்பது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடி வெடுக்க வேண்டும். திமுகவின் கோரிக்கையும் அதுதான்’’ என்றார்.

x