சோழவந்தான்: விளைநிலங்களில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விவசாயிகள் அச்சம்


மதுரை: மதுரை சோழவந்தான் பகுதி விளை நிலங்களில் மின்கம்பிகள் தாழ்வாக தொங்குகின்றன. இதனால் அச்சத்தில் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் பயிரிட முடியாமல் விவசாயிகள் பரிதவிக்கின்றனர்.

மதுரை சோழவந்தான் பகுதியில் ஆயிரக் கணக்கான ஏக்கரில் நெல், கரும்பு, வாழை மற்றும் வெற்றிலை பயிர் விவசாயம் நடந்து வருகிறது. ஆனால், இந்தப் பகுதியில் விவசாயத்திற்கு இடையூறாக விளை நிலங்களில் மின்கம்பிகள் தாழ்வாகச் செல்கின்றன. தொட்டு விடும் தூரத்தில் மின்கம்பிகள் இருப்பதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். அத்தகைய நிலங்களில் விவசாயம் செய்வதை விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். இது குறித்து சோழவந்தான் மின் வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மேலும், மின்வாரிய அலுவலகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையால் மின்கம்பிகளை சரி செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தாழ்வாகத் தொங்கும் மின் கம்பிகளுக்கு பயந்து விவசாயத்தை கைவிட்டுள்ளனர்.

இது குறித்து விவசாயி ராஜேந்திரன் (75) கூறுகையில், “விளை நிலங்களின் குறுக்கே மின்கம்பிகள் தாழ்வாகச் செல்கின்றன. விளை நிலங்களில் உழவுப் பணிகள், மண் வெட்டியால் வேலைபார்க்கும் போது அசந்து மறந்து கைகளை தூக்கினால் மின்வயரில் பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இது போன்று சில வாரங்களுக்கு முன்பு, தாழ்வாக தொங்கிய மின் கம்பியில் கைபட்டு விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் அவர்கள் பணியாளர்கள் பற்றாக்குறையால் உடனடியாக சரி செய்ய முடியவில்லை என்றும் படிப்படியாக செய்து வருகிறோம் என்றும் சொல்கின்றனர். இதனால் மின் கம்பிகள் தாழ்வாக செல்லும் விளை நிலங்களை கவனமாகவும், மின் தடை நாட்களில் கோடை உழவு செய்தும் வருகிறோம். இந்தப் பிரச்சினையால் சுமார் 50 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்ய முடியவில்லை” என்றார்.

இது குறித்து சோழவந்தான் மின்வாரியத்தினர் கூறுகையில், “மின்வாரியத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. படிப்படியாக குறைகளை சரி செய்து வருகிறோம். விரைவில் தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளை சரி செய்துவிடுவோம்” என்றனர்.