சத்திரப்பட்டி சிறு, குறு விசைத்தறி உரிமையாளர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்


ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் சிறு, குறு விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கர பாண்டியபுரம், அய்யனார்புரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான விசைத் தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மருத்துவ துணி எனப்படும் பேன்டேஜ் துணி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இத்தொழிலில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. விசைத் தறி உரிமையாளர்களுக்கு கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆண்டுகளுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

அதன்படி 3ம் ஆண்டுக்கான கூலி உயர்வை இந்த மாத தொடக்கத்தில் இருந்து மருத்துவ துணி உற்பத்தியாளர்கள் வழங்க வேண்டும். ஆனால், தற்போது வரை கூலி உயர்வு வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து விசைத்தறி உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து விசைத்தறி உரிமையாளர்கள் கூறுகையில், “சத்திரப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து சிறு விசைத்தறி கூடங்களும் இன்று மூடப்பட்டதால், ரூ.2 கோடி மதிப்பிலான மருத்துவ துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது. 3 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை இழந்துள்ளனர்.

மருத்துவத்துணி உற்பத்தியாளர்கள் ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்க வேண்டும். தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கூலி உயர்வு பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தொடர் போராட்டம் நடைபெறும்”என்றனர்.