பயறு வகை சாகுபடிக்கு ரூ.49 லட்சம் நிதி ஒதுக்கீடு: கோவை விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு


கோவை: கோவை மாவட்டத்தில் பயறு வகைச் சாகுபடியை அதிகரிக்க ரூ.49 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் அதை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேளாண்மைத் துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் சராசரியாக 8,608 ஹெக்டேர் பரப்பளவில் துவரை, உளுந்து, பச்சைப் பயறு, கொள்ளு, கொண்டைக்கடலை, தட்டை, அவரை உள்ளிட்ட பல்வேறு வகை பயறு வகைப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த பயறுவகைப் பயிர்கள் குறுகிய கால பயிர்களாகும். குறைந்த நீர் தேவை கொண்டவை. பயறுவகைச் செடிகள் அறுவடைக்கு பின்னர், கால்நடைகளின் தீவனத்துக்கு ஏற்றதாகும். கோவை மாவட்டத்தில் பயறு வகை சாகுபடியை அதிகரிக்க ரூ.49 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கு.பெருமாள்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கோவை மாவட்டத்தில் பயறு வகை சாகுபடியினை அதிகரிக்க, பின் வரும் சாகுபடி முறைகளை பயன்படுத்தும் விவசாயிகளுக்காக, உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் மூலம் பயறு வகைத் திட்டத்துக்கு ரூ.49 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் உளுந்து செயல்விளக்கத் திடல்கள் ஹெக்டேருக்கு ரூ.8,500, மானியத்தின் விதைகள், பயறு நுண்ணூட்டம், டிரைகோடெர்மா விரிடி, திரவ உயிர் உரங்கள், அசோடிரேக்டின் ஆகியவை மானியத்தில் வழங்கப்படுகிறது. கொண்டைக்கடலை செயல் விளக்கத் திடல் ஹெக்டேருக்கு ரூ.90 மானியத்தில் 75 கிலோ விதை மற்றம் பயறு நுண்ணூட்டம் 5 கிலோ வழங்கப்படுகிறது.

வீரியம் மிக்க பத்து ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட உளுந்து, கொண்டைக் கடலை, தட்டை சான்று பெற்ற விதைகள் 50 சதவீதம் மானியம் அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.50 வழங்கப்படுகிறது. வீரியமிக்க சான்று பெற்ற கொண்டைக்கடலை, உளுந்து, தட்டை விதைகளை உற்பத்தி செய்து தரும் விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.25 ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. பயிர்களின் செயல் திறனை அதிகரிக்க நுண்ணூட்டங்களை வழங்க, ஹெக்டேருக்கு 5 கிலோ கிராம் பயறு நுண்ணூட்டம் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.

காற்றிலுள்ள தழைச்சத்தை பயிரில் நிலைநிறுத்தவும், கரையாத மணிச்சத்தை கரைக்கவும் சாம்பல் சத்தினை பயிருக்கு கடைக்கச் செய்யக் கூடிய திரவ உயிர் உரங்கள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x