தஞ்சையில் காவேரி கூக்குரல் மூலம் 4.75 லட்சம் மரங்கள் நடும் திட்டம் தொடக்கம்


உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூரில் ஈஷாவின் காவேரி கூக்குரல் மூலம் 4.75 லட்சம் மரங்கள் நடும் திட்டத்தை இன்று எம்.எல்.ஏ டிகேஜி.நீலமேகம் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஈஷாவின் காவேரி கூக்குரல் மூலம் 4.75 லட்சம் மரங்கள் நடும் திட்டத்தை இன்று டி.கே.ஜி.நீலமேகம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

ஈஷா தன்னார்வ அமைப்பானது 2002-ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் மரம் நடும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காவிரி ஆற்றில் பசுமையை ஏற்படுத்த காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வியக்கம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவிரி வடிநிலப் பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க விவசாய நிலங்களில் மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுக்கிறது. இதன் மூலம் மண்ணின் தரமும், அதன் நீர்பிடிப்புத் திறனும் மேம்படும்.

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் இந்தாண்டு (2024-2025) 1.21 கோடி மரங்களை நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டம் தோறும் இதன் தொடக்க விழாக்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்திற்கான தொடக்க விழா, இன்று அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை வளாகத்தில் நடைப்பெற்றது.

இதில் சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் தலைமை வகித்து, மரக்கன்றுகளை நட்டு நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தஞ்சை மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் நிலைய மருத்துவ அலுவலர் அமுத வடிவு ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.