ஒரே மாதத்தில் மின்சாரம் தாக்கி இரு யானைகள் உயிரிழப்பு @ கிருஷ்ணகிரி


கிருஷ்ணகிரி: ஒரே மாதத்தில் மின்சாரம் தாக்கி இரு யானைகள் உயிரிழந்துள்ள சோக சம்பவங்கள் நடந்துள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி, ஜவளகிரி உள்ளிட்ட வனப்பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளது. இப்பகுதியில் உள்ள யானைகள் உணவு, தண்ணீர் தேடி கூட்டமாகவும், தனித்தனியாகவும் பிரிந்து சென்று அருகே உள்ள விளை நிலங்களுக்குள் சென்று பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

அப்போது யானைகள் செல்லும் வழித்தடங்களில் தாழ்வாக உள்ள மின் கம்பிகளில் உரசி யானைகள் உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. அதே போல் இந்த மாதம் கடந்த 6-ம் தேதி தேன்கனிக்கோட்டை அருகே சந்தனப்பள்ளியில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய மக்கனா யானை ஒன்று ஏரியில் தாழ்வாக உள்ள மின்கம்பியில் உரசியதில் பரிதாபமாக உயிரிழந்தது.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, நேற்று இரவு தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வன சரகத்திற்கு உட்பட்ட பனைகாப்பு காட்டில் இருந்து வெளியேறிய, 20 வயது ஆண் யானை ஒன்று பாலதொட்டனப்பள்ளியிலிருந்து சாவரபெட்டா செல்லும் சாலை அருகே லோகேஷ் என்பவரது பசுமை குடில் அருகே சென்றது.

அப்போது தாழ்வாக சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது யானையின் தும்பிக்கை உரசியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்து பின்னர் புதைத்தனர். இது குறித்து வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

ஒரு மாத்தில் இரு யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் வனஉயிரின ஆர்வர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. யானைகள் வழித்தடங்களில் தாழ்வான மின் கம்பிகள் உள்ளதா என ஆய்வு செய்து யானைகள் உயிரிழப்பை தடுக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.