கும்பகோணம் புதிய பேருந்து நிலைய டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய எம்எல்ஏ கோரிக்கை


சாக்கோட்டை க.அன்பழகன்

கும்பகோணம்: கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் எனக் கும்பகோணம் எம்எல்ஏ-வான சாக்கோட்டை க.அன்பழகன், மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளார்.

கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் அண்மைக்காலமாகக் கஞ்சா, மதுபானங்களை உபயோகிப் பவர்களால் பொதுமக்கள், பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள், போலீஸார் வரை தாக்கப்பட்டனர்.

இதில் அரசுப் பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரத்தில் மட்டும் சிலர் கைது செய்யப்பட்டனர். கும்பகோணம் புதிய பேருந்து நிலையம், பாலக்கரை, மேலக்காவிரி, தாராசுரம் உள்ளிட்ட பல்வேறு பிரதானப் பகுதிகளில் வழிப்பறி, செல்போன் பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.

இது தொடர்பாகக் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த வணிகர்கள், பொதுமக்கள் ஏராளமானோர், கும்பகோணம் எம்எல்ஏ-வான சாக்கோட்டை க. அன்பழகனிடம் முறையிட்டனர். இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் பேசிய எம்எல்ஏ, “கும்பகோணம் மக்களுக்கும், வெளியூரில் இருந்து வருபவர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தைச் சுற்றி உள்ள டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இது குறித்து பேசிய எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், அண்மைக் காலமாக கும்பகோணம் பகுதியில் நடைபெற்று வரும் குற்றச் சம்பவங்கள் தொடர்பாக, என்னிடம் முறையிட்டனர். அதன் பேரில், நான் மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்ட போது, அவர், மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன், உடனே, கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்களைக் கொண்ட கூட்டம் நடத்தி, இதற்கு நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் என கூறினார்.