மோடியின் தியானம் அரசியல் நோக்கம் கொண்டது: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு


சென்னை: பிரதமர் மோடியின் தியானம் அரசியல் நோக்கம் கொண்டதே தவிர, ஆன்மிக நோக்கம் கொண்டதல்ல என்று தமிழ்நாடு காங்கிரஸ்கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2024 மக்களவைத் தேர்தல் இறுதி பிரச்சாரத்தை முடிந்துவிட்டு மே 30-ம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை புரிந்து, அங்குள்ள விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாட்கள் தியானம் செய்வது என்று நரேந்திர மோடி திட்டமிட்டிருக்கிறார். இறுதிகட்ட தேர்தல் நடைபெற இருக்கிற 57 மக்களவைத் தொகுதிகளில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக, விவேகானந்தர் பாறையில் தியானம் செய்வது என பிரதமர் மோடி தேர்வு செய்திருப்பதைவிட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது.

சுவாமி விவேகானந்தர் தம்வாழ்நாள் முழுவதும் மதநல்லிணக்கத்தைக் கடைபிடித்து இந்துமதத்தை உலகம் முழுவதும் பரப்பியவர். அனைத்து மதத்தினராலும் அன்போடு நேசிக்கப்பட்டவர். அவர்ஒரு சாந்த சொரூபி. அதேநேரத்தில், தமது நாவன்மையால் உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர். அவரது ஆன்மீகப் பயணத்தில் 1893 செப்.11-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற சமய மாநாட்டில் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.

சுவாமி விவேகானந்தர் தமதுஉரையை நிறைவு செய்கிற போது, ‘ஒருவருக்கு நல்லிணக்கமும், அமைதியும் மட்டுமே தேவைப்படுகிறது. வேற்றுமை அல்ல என்றும், இதை ஒவ்வொரு மதத்தின் பதாகையிலும் எழுத வேண்டும்” என்று மோடிக்கு உரைக்கிற மாதிரி131 ஆண்டுகளுக்கு முன்பு பேசியவர் சுவாமி விவேகானந்தர்.

ஆன்மீக ஞானக்கடல் விவேகானந்தர் பாறையில் மோடி தியானம் செய்வது என்பது ஏமாற்று நாடகம். சுவாமி விவேகானந்தரின் போதனைகளை ஏற்று அவரைப் போற்றுபவர்கள் எவரும் நரேந்திர மோடியின் தியான முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது அரசியல் நோக்கம் கொண்டதே தவிர, ஆன்மீக நோக்கம் கொண்டதல்ல.

நரேந்திர மோடி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தன்னந்தனியாக தியானம் செய்கிற 3 நாட்களும் அங்கு சுற்றுலாப் பயணிகள்எவரும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தடை மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கிற செயலாகும். இதை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

x