குமரி மேற்குக் கடற்கரை பகுதியில் 61 நாள் மீன்பிடி தடைகாலம் ஜூ்ன் 1-ல் துவக்கம்


நாகர்கோவில்: குமரி மேற்குக் கடற்கரை பகுதிகளில் 61 நாள் மீன்பிடி தடைகாலம் ஜூன் 1-ம் தேதி துவங்குகிறது. இதனால் ஆழ்கடலில் மீன்பிடி பணியில் ஈடுபட்டுள்ள விசைப் படகுகள் கரைதிரும்பி வருகின்றன.

மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு இனப்பெருக்க காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த தடைக் காலம் இரு பருவமாக உள்ளது.

குமரி கிழக்கு கடற்கரை பகுதியாகிய கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ம் தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரையும், மேற்குக் கடற்கரை பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம், தூத்தூர், நீரோடி வரையிலான கடற்கரை கிராமங்களில் ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரையும் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும்.

மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி விசைப்படகு மீனவர்கள் தங்கள் படகுகளை பழுது நீக்குவதுடன் வலைகள், மீன்பிடி உபகரணங் களையும் பராமரிப்பு செய்வர். மீன் பிடி தடைக்காலம் துவங்குவதையொட்டி, ஆழ்கடல் பகுதிக்குச் சென்ற விசைப் படகு மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர்.

இம்மாதம் 31-ம் தேதி நள்ளிரவுக்குள் அனைவரும் கரை திரும்பி விடுவர். அதே சமயம் பைபர் படகுகளும், நாட்டுப் படகுகளும் கரைமடி பகுதிகளில் தொடர்ந்து மீன்பிடி பணியில் ஈடுபடும் என்பதால் உள்ளூர் அத்தியாவசிய மீன் தேவைக்கு தட்டுப்பாடு ஏற்படாது.