புதுச்சேரி மக்களவைத் தொகுதி வாக்குகள் எண்ணும் பணியில் 631 பணியாளர்கள் நியமனம்


பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி: புதுச்சேரி மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கைக்கு அலுவலர்கள் உள்ளிட்ட 631 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பிற்பகலில் முன்னணி விவரங்கள் தெரியும். வாக்கு எண்ணும் 5 மையங்களிலும் 1,500 போலீஸார் மூன்றடுக்கு பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர்.

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் உள்ளிட்ட 26 பேர் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் வாக்களிக்க 10,23,699 பேர் தகுதியாக இருந்தும், வாக்குகளை 8,07,724 பேர் மட்டுமே வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர். அதனடிப்படையில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் புதுச்சேரி, காரைக்கால், ஏனம், மாஹே ஆகிய 4 பிராந்தியங் களையும் சேர்த்து மொத்தம் 78.90 சதவீத வாக்குகள் பதிவாகின. புதுச்சேரி மக்களவைத் தொகுதி வாக்குகள் எண்ணும் பணியானது பிராந்திய வாரியாக புதுச்சேரியில் 2 மையங்கள், காரைக்கால், ஏனாம், மாஹே ஆகியவற்றில் தலா1 மையங்கள் என மொத்தம் 5 மையங்களில் நடைபெறவுள்ளன.

வாக்கு எண்ணும் பணியில் 143 வாக்கு எண்ணும் மைய மேற்பார்வையாளர்கள், 151 வாக்கு எண்ணும் மைய உதவி அலுவலர்கள், 137 நுண் பார்வையாளர்கள், 200 ஊழியர்கள் (வாக்கு இயந்திரங்களை எடுத்துச் செல்பவர்கள், உதவியாளர்கள் உள்ளிட்டோர் என மொத்தம் 631 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கையானது சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக தலா 3 சுற்றுகள் நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அரியாங்குப்பம், மணவெளித் தொகுதிகளுக்கு மட்டும் தலா 4 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் புதுச்சேரியின் 2 மையங்களிலும் 3 அடுக்குப் பாதுகாப்பு மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி சுமார் 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வுள்ளனர்.

காரைக்கால், மாஹே, ஏனம் ஆகிய பிராந்தியங்களைச் சேர்த்து சுமார் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான குலோத்துங்கனிடம் கேட்டபோது, “வாக்கு எண்ணிக்கையின் போது மேஜைக்கு ஒரு முகவர் என நியமிக்கலாம்.

ஆகவே அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து வேட்பாளர் களது முகவர்களும் அடையாள அட்டைக்காக வரும் ஜூன் 1-ம் தேதி மாலை வரை பதிவு செய்யலாம். வாக்கு எண்ணும் மையங்களுக்கு முகவர்கள் அடையாள அட்டையுடன் வர வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும். வாக்கு எண்ணிக்கை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்படும்.

ஒவ்வொரு சுற்றிலும் 105 டேபிள்கள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். முகவர்கள் காலை 7 மணிக்கு முன்னதாக வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வந்துவிட வேண்டும். காலை 6.30 மணிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையிலிருந்து முகவர்கள் முன்னிலையில் அவை வெளியே கொண்டுவரப்படும். வாக்கு எண்ணிக்கை விவரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அறிவிப்பு பலகையிலும் வாக்கு எண்ணிக்கை விபரங்கள் வெளியிடப்படும்" என்றார்.

x