‘கோமாவில் இருந்து இப்போதுதான் மீண்டீர்களோ?’ - பால்வளத் துறை அமைச்சருக்கு கடிதம்


சென்னை: “பொதுமக்களுக்கு ஆவின் பால், பால் சார்ந்த உபபொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைத்திட அவற்றின் உற்பத்தி தங்குதடையின்றி செய்திட ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆவினை மீட்டெடுக்க வேண்டும்" என பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “நேற்றைய தினம் (28.05.2024) தங்களின் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலினின் கனிவான வழிகாட்டுதலில் கடும் வறட்சியிலும் 31 லட்சத்தை தாண்டியது ஆவின் பால் கொள்முதல் எனவும், கடுமையான நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் மூலம் ஆவின் ஒரு நிலையான வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளீர்கள்.

பால்வளத் துறையையும், ஆவினையும் கவனிக்கத் தவறி முழுநேர பாஜக எதிர்ப்பு அரசியலை மட்டுமே தாங்கள் கையில் எடுத்திருந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆவின் குறித்து தாங்கள் சற்றே சிந்தித்திருப்பது மகிழ்ச்சி தான் என்றாலும் கூட அதிகாரிகள் தரும் தவறான புள்ளி விவரங்களை வைத்துக் கொண்டு தமிழக முதல்வரின் கனிவான வழிகாட்டுதலில் கடும் வறட்சியிலும் ஆவினுக்கான பால் கொள்முதல் அதிகரித்திருப்பதாக கூறியிருப்பது உள்ளபடியே உங்களுக்கே அது நகைப்பாக தெரியவில்லையா..? இல்லை மக்கள் இதையெல்லாம் எங்கே கண்டு கொள்ள போகிறார்கள்..? என்கிற எண்ணமா என தெரியவில்லை.

ஏனெனில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தமிழ்நாட்டில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதாக எந்த மாவட்டத்தில் இருந்தும் ஊடகங்களில் செய்திகள் வந்ததாகவும், அரசு தரப்பிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டதாகவும் எந்த ஒரு தகவலும் இல்லை. அதே சமயம் நீங்கள் சொன்னது போல தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி ஏற்பட்டிருந்தால் விவசாய பெருமக்களுக்கும், கால்நடை வளர்ப்போருக்கும் அரசு வறட்சி நிவாரணம் வழங்கியிருக்க வேண்டும் தானே..? அப்படியானால் வறட்சி நிவாரணம் குறித்து முதல்வர் அறிவிப்பு ஏதும் வெளியிட்டதாக தெரியவில்லையே..?

மாறாக இந்த கோடை காலத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வழக்கத்தை விட 28% கூடுதலாக மழை தான் பொழிந்திருப்பதாக வானிலை ஆய்வு மையமும், ஊடகங்களும் தெரிவித்துள்ள நிலையில் ஒருவேளை நீங்கள் தமிழ்நாட்டில் கடும் வறட்சி ஏற்பட்டதாக பெருங்கனவு கண்டீர்களோ..?, அல்லது கோமாவில் இருந்து தற்போது தான் மீண்டு வந்தீர்களோ..? அல்லது திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த நினைத்தீர்களோ...? தெரியவில்லை.

அதுமட்டுமின்றி பொதுவாகவே மழைக் காலங்களில் பசுந்தீவன உற்பத்தி காரணமாக பால் உற்பத்தி கணிசமாக உயரும் என்பது படிக்காத பாமர மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்கிற நிலையில் கோடையில் பெய்த வழக்கத்தை விட 28% கூடுதலாக பெய்த மழையால் கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவன உற்பத்தி பெருகி, பால் உற்பத்தியும் இயற்கையாகவே பெருகியிருப்பதில் பெருமைப்பட என்ன இருக்கிறது...?

மேலும், தமிழகம் முழுவதும் ஆவினுக்கான பால் கொள்முதல் கடந்த 25ம் தேதி 30.15லட்சம் லிட்டர் மற்றும் 26ம் தேதி 30.85லட்சம் லிட்டர் என இரு தினங்களில் மட்டுமே பால் கொள்முதல் சற்று கூடுதலாக நடைபெற்றுள்ளது. ஆனால் அதுவே மே மாதம் 1ம் தேதி முதல் 26ம் தேதி வரை நிலவரப்படி சராசரியாக தினசரி பால் கொள்முதல் என்பது வெறும் 28.15லட்சம் லிட்டர் மட்டுமே என்கிற நிலையில் இருந்துள்ளதோடு இது கடந்த 2023ம் ஆண்டு மே மாதத்தோடு (29,44,620லிட்டர்) ஒப்பிடுகையில் முதல்வரின் தொலைநோக்கு திட்டமான வெண்மைப் புரட்சியை சிதைக்கும் வண்ணமாக சுமார் 1.30லட்சம் லிட்டர் பால் கொள்முதல் குறைவாகும்.

அப்படியானால் கடந்த ஆண்டோடு நடப்பாண்டின் பால் கொள்முதல் தமிழக முதல்வரின் கனவான வழிகாட்டுதலில் 1லட்சம் லிட்டருக்கும் மேல் குறைந்துள்ளதாக எடுத்துக் கொள்ளலாமா..? என்பதை பால்வளத்துறை அமைச்சரான தாங்கள் தான் விளக்க வேண்டும்.

மேலும், ஆவின் நிறுவனத்தின் வளர்ச்சி மீது அக்கறையற்ற அதிகாரிகள் தந்த தவறான தகவலைக் கொண்ட தங்களது X வலைதளப் பதிவு கடந்த சில தினங்களுக்கு முன் காக்களூர் ஆவின் பால் பண்ணையில் நடைபெற்ற பால் பாக்கெட்டுகள் திருட்டு சம்பவத்தையும், அதற்கு முன் வேலூர், அம்பத்தூர் பால் பண்ணைகளைப் போல் பல்வேறு மாவட்ட ஆவின் பால் பண்ணைகளிலும் நடைபெற்று வரும் பால் திருட்டு சம்பவங்களையும், கடந்தாண்டு வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஆவின் பால் கொள்முதல் நிலையங்களில் நடைபெற்ற பால் கலப்படம் உள்ளிட்ட முறைகேடு சம்பவங்களை மட்டுமின்றி தமிழ்நாட்டில் அமுல் நிறுவனத்தின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை துறையில் வருகையை மடைமாற்றும் செயலாகவே தெரிகிறது.

எனவே, வெறும் பரபரப்புக்காகவும், வெற்று விளம்பரத்துக்காகவும் மட்டுமே அறிக்கை, சமூக வலைதள பதிவுகளை வெளியிடாமல் ஆவினுக்கான பால் கொள்முதலை அதிகரிக்கவும், பால் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் பால் கலப்படத்தையும், பால் பண்ணைகளில் நடைபெற்று வரும் பால் பாக்கெட்டுகள் திருட்டு சம்பவங்களையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கிடவும், பால் முகவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆவின் பால், பால் சார்ந்த உபபொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைத்திட அவற்றின் உற்பத்தி தங்குதடையின்றி செய்திட ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆவினை மீட்டெடுக்குமாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

x