கேஜ்ரிவால் ஜாமீன் மனு நிராகரிப்பு முதல் மம்தாவின் கேலி வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> கேஜ்ரிவாலின் ஜாமீன் நீட்டிப்பு மனு மீது விசாரணை இல்லை: தனது இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவினை உச்ச நீதிமன்றம் விசாரிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை தொடர்புடைய பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.அது ஜூன் 1ம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் மருத்துவக்காரணங்களுக்காக தனது இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று அரவிந்த் கேஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார்.

> வடஇந்தியாவை வாட்டும் வெப்பம்: நாட்டின் பல பகுதிகளில் வெப்ப அலை தொடர்ந்து வாட்டி வரும் நிலையில், ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெப்ப அலைக்கான ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

> இந்தியா திரும்ப இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா: பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் ஹாசன் தொகுதி எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து வியாழக்கிழமை இந்திய கிளம்ப இருக்கிறார். அவர் மே 31-ம் தேதி அதிகாலையில் பெங்களூரு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

> மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய மணிசங்கர் அய்யர் பேச்சு: காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யரின் பேச்சு மீண்டும் அரசியல் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மணிசங்கர், " கடந்த அக்டோபர் 1962-ல் சீனா இந்தியாவை ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது" என்று கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சை கடுமையாக சாடியுள்ள பாஜக, "திருத்தல் வாதத்துக்கான துணிச்சலான முயற்சி" என்று கூறியுள்ளது. இதனிடையே," தவறுதலாக பயன்படுத்திய தனது வார்த்தைகளுக்காக காங்கிரஸ் மூத்த தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்" என்று காங்கிரஸ் ஊடகப் பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

> ‘கடவுள் அரசியல் செய்யக்கூடாது’ - மம்தா தாக்கு: ஒரு நோக்கத்துக்காக பரமாத்மா தன்னை அனுப்பி உள்ளார் என்ற பிரதமர் மோடியின் பேச்சை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேலி செய்துள்ளார். கொல்கத்தாவில் நடந்த பேரணி ஒன்றில் பேசிய அவர், "கடவுள் அரசியல் செய்யக்கூடாது, கலவரங்களைத் தூண்டக்கூடாது. மோடி தன்னைக் கடவுளாக கருதுகிறார். அதனால் அவருக்காக கோயில் கட்டலாம். அவர் அங்கு அமர்ந்து நாட்டுக்கு தொல்லை கொடுப்பதை நிறுத்த வேண்டும்" என்று சாடியுள்ளார்.

> ரூ.4 கோடி விவராகத்தில் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்: தாம்பரத்தில், ஓடும் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உட்பட நான்கு பேருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதன்படி, வரும் 31-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

> “முழு நலமுடன் வருவேன்”- வைகோ வீடியோ பதிவு: தோள்பட்டை பகுதியில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக சென்னை - அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வைகோ தனது உடல்நிலை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "மருத்துவர்களின் ஆலோசனையின் படி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். எனக்கு தோள்பட்டை பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். நான் நன்றாக உள்ளேன். முழு ஆரோக்கியத்துடன் வருவேன்" என்று தெரிவித்துள்ளார்.

> “இந்தியா வலுவான அணி” - இயான் மார்கன் கருத்து: வரும் ஞாயிற்றுக்கிழமை டி20 உலகக் கோப்பை தொடர் மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்று விளையாடும் அணிகளில் இந்தியா வலுவானது என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மார்கன் தெரிவித்துள்ளார்.

> டெல்லி கலவர வழக்கில் ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன்: டெல்லி ஜாமியா பகுதி மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பேசியதாற்காக தேச துரோகம் மற்றும் உபா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷர்ஜீல் இமாமுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

> வைரலாகும்‘ஆல் ஐஸ் ஆன் ரஃபா’ ஹேஷ்டேக்: ரஃபா தற்காலிக முகாம் மீது செவ்வாயன்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 37-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் உலகளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, “ஆல் ஐஸ் ஆன் ரஃபா” (All eyes on Rafah) என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தற்போது ரஃபாவின் பக்கம் உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது.