திருச்சி: நிலுவைத் தொகை கோரி ஆவின் நிறுவனம் முன்பு வாடகை வேன் உரிமையாளர்கள் போராட்டம்


பால் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு வாடகை நிலுவையை வழங்கக் கோரி திருச்சி ஆவின் நிறுவனம் முன்பு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டுநர்கள்.

திருச்சி: திருச்சி கொட்டப்பட்டு ஆவின் நிறுவனத்தில் இருந்து திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட முகவர்களுக்கு என தினமும் 1.50 லட்சம் லிட்டர் பாக்கெட் பால் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த பால் பாக்கெட்கள் ஒப்பந்தம் அடிப்படையில் 51 சரக்கு வேன் மூலம் முகவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த ஒரு ஆண்டாக இந்த வேன்களுக்கு தர வேண்டிய வாடகை தொகையில் 4 மாதம் நிலுவைத் தொகை வைத்து கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4 மாதத் எந்த தொகையும் இதுவரை கொடுக்கவில்லை. இது குறித்து ஆவின் நிர்வாக அதிகாரியிடம் பல முறை கேட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதையடுத்து நள்ளிரவு முதல் ஆவின் வேன்களில் பாக்கெட் பால்களை ஏற்றாமல் ஆவின் பால் வண்டி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் ஆவின் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியும் எவ்வித முடிவு ஏற்படவில்லை. இந்த நிலையில் அருகில் உள்ள பால் முகவர்கள் நேரடியாக வந்து இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மூலம் பாலை எடுத்துச் சென்றனர். இதையடுத்து வேன் வாகன உரிமையாளர்கள் ஆவின் நிர்வாகம் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியில், நிலுவை வாடகை பாக்கியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவின் நிர்வாகம் வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.