கோடை வெப்பத்தை தணிக்க நள்ளிரவு வரை கடற்கரை, பூங்காக்களில் அனுமதிக்க கோரி வழக்கு: டிஜிபி, ஆணையர் பதிலளிக்க உத்தரவு


சென்னை: கோடை வெப்பத்தை தணிக்க இரவுநேரங்களில் கடற்கரை, பூங்காக்களுக்கு செல்லும் மக்களை நள்ளிரவு வரை அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை திருமங்கலத்தை சேர்ந்த ஜலீல் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோடை வெயிலின் வெப்பம் இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதுசென்னையில் பெரும்பாலான போக்குவரத்து சிக்னல்களில் மாநகராட்சி நிர்வாகம் பசுமைப்பந்தல் அமைத்துள்ளது.

இரவு 9.30 மணிக்குமேல்: வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, சென்னையில் கடற்கரை மற்றும் பூங்காக்களுக்கு செல்லும் பொதுமக்களை இரவு 9.30 மணிக்குமேல் போலீஸார் அனுமதிப்பது இல்லை.

எனவே, சென்னையில் கடற்கரை மற்றும் பூங்காக்களுக்கு செல்லும் பொதுமக்களை நள்ளிரவு வரை அனுமதிக்க டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரிஇருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக டிஜிபிமற்றும் சென்னை மாநகர காவல்ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.