நகராட்சிகள், மாநகராட்சிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதியம் பெற முடியாமல் ஓராண்டாக தவிப்பு


தாம்பரம்: தமிழகத்தில் நகராட்சிகள், மாநகராட்சிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களில் சுமார் 800 பேர் கடந்த ஓராண்டாக ஓய்வூதியம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற சுமார் 40,000 பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் பலர் புதிதாக ஓய்வு பெற்று வருகின்றனர். அவ்வாறு ஓய்வு பெறுபவர்களுக்கு உள்ளாட்சி நிதி தணிக்கை துறை மூலம் அவர்களின் பதவிக்கு ஏற்றார் போல் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த ஓராண்டாக ஓய்வு பெற்ற சுமார் 800 பேர் இதுவரை ஓய்வூதியம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். பணி ஓய்வு பெற்று பல மாதங்கள் ஆகியும் இன்னும் அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை.

குறிப்பாக கடந்த ஜூலை மாதத்துக்குப் பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு இன்னும் ஓய்வூதியம் வழங்கப்படாமல் உள்ளது. எனவே ஓய்வு பெற்றவர்களுக்கு விரைவாக ஓய்வூதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஓய்வூதியர் சங்கத்தினர் சிலர் கூறியதாவது: நகராட்சி, மாநகராட்சிகளில் சுமார் 800 பேர் கடந்த ஜூலை மாதம் முதல் ஓய்வு பெற்றுள்ளனர். இவர்கள் இன்னும் ஓய்வூதியம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் ஆட்கள் பற்றாக்குறையைக் காரணம் காட்டி காலதாமதம் செய்கின்றனர்.

ஓய்வூதியம் கிடைக்காததால் ஓய்வு பெற்ற பலர் பிறரை நம்பி வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு விரைவாக ஓய்வூதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதைத் தள்ளி வைப்பது ஏற்புடையது அல்ல. எனவே கூடுதல் பணியாளர்களை அரசு நியமிக்க வேண்டும்.

இதேபோல் சில ஓய்வு பெற்றவர்களுக்கு மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் ஒப்புதல் கடிதம் வழங்காமல் காலதாமதம் செய்வதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அரசு உரிய விசாரணை மேற்கொண்டு ஓய்வு பெற்றவர்களுக்கு விரைவாக ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

x