தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்ட பரிசோதனையில் 13,699 பேருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம்


சென்னை: தமிழகத்தில் 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சாமணப்பள்ளி கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் இதுவரை 1.50 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர்.

அமைப்பு சாரா மற்றும் அமைப்பு சார் தொழிலாளர்களுக்கு பணியிடங்களுக்கே சென்று மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்கின்றனர். அதில், சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்த பாதிப்பு போன்றஇணை நோய்கள் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு அதற்கானமருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. 35 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, 6.3 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்து, தற்போது, 2.65 லட்சம் பேருக்கு பல்வேறு மருத்துவபரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 13,699 பேருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தபாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறும்போது, ‘‘சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தத்தைமுறையாக கவனிக்காவிட்டால் அது உடல் உறுப்புகளை பாதிப்பதுடன் உயிருக்கே ஆபத்து ஏற்படும். அதனால், தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

தொழிலாளர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய, பரிசோதனைகள் மூலம் ஆரம்ப நிலையிலேயே சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தத்தை கண்டறிந்து சிகிச்சை வழங்கப்படுகிறது’’ என்றார்.

x