டென்னிஸ் தரவரிசையில் ஜன்னிக் சின்னர் முதலிடம்


பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் முடிவடைந்த நிலையில் சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார் இத்தாலியைச் சேர்ந்த 22 வயதான ஜன்னிக் சின்னர். 1973-ம் ஆண்டில் கணினிமயமாக்கப்பட்ட தரவரிசை தொடங்கியதிலிருந்து இத்தாலியை சேர்ந்த வீரர் முதலிடத்தை பிடிப்பது இதுவே முதன்முறையாகும்.

இந்த சீசனில் ஜன்னிக் சின்னர் 36 ஆட்டங்களில் விளையாடி 33 வெற்றிகளை குவித்திருந்தார். 3 பட்டங்களையும் வென்றிருந்தார். இதில் கடந்த ஜனவரி மாதம் வென்ற ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டமும் அடங்கும். அவர், தோல்வி அடைந்த 3 ஆட்டங்களில் 2, ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸுக்கு எதிரானவையாகும். நேற்று முன்தினம் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அல்கராஸ் ஓர் இடம் முன்னேறி 2-வது இடத்தை எட்டியுள்ளார்.

பிரெஞ்சு ஓபனில் காயம் அடைந்து 4-வது சுற்று வெற்றியுடன் வெளியேறிய செர்பியாவின் ஜோகோவிச் 2 இடங்களை இழந்து 3-வதுஇடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். பிரெஞ்சு ஓபனில் 2-வது இடம் பிடித்த ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ் 4-வது இடத்தில் தொடர்கிறார். ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ், ஆந்த்ரே ரூப்லெவ் ஆகியோர் 5 மற்றும்6-வது இடங்களில் உள்ளனர். நார்வேயின் காஸ்பர் ரூடு, போலந்தின் ஹூபர்ட் ஹுர்காக்ஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோர் முறையே 6 முதல் 10-வது இடங்களில் உள்ளனர்.