ஹாக்கி போட்டி: பாண்டிச்சேரி அணி வெற்றி!


வெற்றி பெற்ற பாண்டிச்சேரி வாரியர்ஸ் அணி

கோவில்பட்டி: கோவில்பட்டியில் நடந்த மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் பாண்டிச்சேரி வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது. கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் ஹாக்கி மைதானத்தில் 5-ம் ஆண்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டி நடந்தது. 3 நாட்கள் நடந்த போட்டியில் மாநிலம் முழுவதில் இருந்து 21 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

இன்று மாலை நடந்த இறுதி போட்டியில் பாண்டிச்சேரி வாரியர்ஸ் அணியும், பாண்டவர்மங்கலம் ஹாக்கி கிளப் அணியும் மோதின. இதில், 3 - 2 என்ற கோல் கணக்கில் பாண்டிச்சேரி அணி வெற்றி பெற்றது. முன்னதாக நடந்த 3, 4-வது இடங்களுக்கான போட்டியில் கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் அணியும், சிறப்பு விளையாட்டு விடுதி அணியும் மோதின. இதில், 2 -1 என்ற கோல் கணக்கில் சிறப்பு விளையாட்டு விடுதி அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் தொழிலதிபர் சதீஷ் தலைமை வகித்தார். நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், சண்முகராஜ், வெம்பக்கோட்டை காவல் ஆய்வாளர் சங்கர், ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குருசித்ர சண்முக பாரதி ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

வெற்றி பெற்ற பாண்டிச்சேரி அணிக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த பாண்டவர்மங்கலம் அணிக்கு ரூ.15 ஆயிரம், 3-வது இடம் பிடித்த சிறப்பு விளையாட்டு விடுதி அணிக்கு ரூ.10 ஆயிரம், 4-வது இடம் பிடித்த யங் சேலஞ்சர்ஸ் அணிக்கு ரூ.7 ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை யங் சேலஞ்சர்ஸ் கிளப் செயலாளர் மாரியப்பன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

x