இலங்கை அதிர்ச்சி தோல்வி | T20 WC


டல்லாஸ்: டி20 உலகக் கோப்பையில் வங்கதேச அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கை அணிக்கு அதிர்ச்சி தோல்வியைக் கொடுத்துள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் நேற்று காலை 6 மணிக்கு இலங்கை, வங்கதேச அணிகள் மோதின. முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக பதும் நிசங்கா மட்டும் 47 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். வங்கதேசம் தரப்பில் ரிஷாத் ஹொசைன், முஸ்டாபிஸுர் ஆகியோர் தலா 3 விக்கெட்களைச் சாய்த்தனர்.

பின்னர் 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணி தொடக்க வீரர்களான சவும்யா சர்க்கார் 0, டான்சிட் ஹசன் 3 ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஆனால் அதன் பின்னர் விளையாட வந்த லிட்டன் தாஸ் 36 ரன்கள் குவித்தார். தவ்ஹித் ஹிரிதோய் 20 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார்.

வெற்றிக்குத் தேவையான ரன்களை மஹ்மத்துல்லா, டான்சிம் ஹசன் ஆகியோர் எடுத்தனர். 19 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்த வங்கதேசம் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. மஹ்மத்துல்லா 16 ரன்களும், டான்சிம் ஹசன் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இலங்கை அணி தான் விளையாடிய 2 லீக் போட்டிகளிலும் தோல்வி கண்டுள்ளது. அதே நேரத்தில் முதல் லீக் போட்டியிலேயே வங்கதேச அணி வெற்றியைப் பதிவு செய்துள்ளது.