சூப்பர் ஓவரில் பேட்டிங், பந்துவீச்சில் அசத்தல்: நமீபியாவுக்கு வெற்றி தேடிக்கொடுத்தார் டேவிட் வைஸ்


டேவிட் வைஸ்

பிரிட்ஜ் டவுன்: ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஓமன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது நமீபியா அணி.சூப்பர் ஓவரில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் டேவிட் வைஸ் அபாரமாக செயல்பட்டார்.

ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேற்று காலை பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள ஓமன் - நமீபியா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஓமன் அணி 19.4 ஓவர்களில் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அதிகபட்சமாக காலித் கைல் 39 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 34 ரன்களும், ஜீஷான் மக்சூத் 20 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 22 ரன்களும் எடுத்தனர். அயான் கான் 15, ஷகீல் அகமது 11 ரன்கள் சேர்த்தனர். நமீபியா அணி தரப்பில் ரூபன் டிரம்பெல்மேன் 4, டேவிட் வைஸ் 3, ஜெர்ஹார்டு எராஸ்மஸ் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

110 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நமீபியா அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த அணி ஒரு கட்டத்தில் 17 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்தது. மைக்கேல் வான் லிங்கன் 0, நிக்கோலஸ் டாவின் 24, ஜெர்ஹார்டு எராஸ்மஸ் 13 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜான் ஃப்ரிலிங்க் 43, சுமித் 8 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் மெஹ்ரான் கான் வீசிய ஓவரின் முதல் பந்தில் பைஸ் வாயிலாக 4 ரன்கள் கிடைத்தன.

ஆனால் இதன் பின்னர் ரன் ஏதும் விட்டுக்கொடுக்காத மெஹ்ரான் கான், சுமித்தை (8) ஆட்டமிழக்கச் செய்தார். இதன் பின்னர் டேவிட் வைஸ் களமிறங்கினார். பிலால் கான் வீசிய 19-வது ஓவரில், டேவிட் வைஸ் சிக்ஸர் விளாச, இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைக்கப்பெற்றன. கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் மெஹ்ரான் கான் வீசிய முதல் பந்தில் ஜான் ஃப்ரிலிங்க் போல்டானார். அவர், 48 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் சேர்த்தார். 2-வது பந்தில் ரன் சேர்க்கப்படாத நிலையில் 3-வது பந்தில் ஜேன் கிரீன் (0), எல்பிடபிள்யூ முறையில் நடையை கட்டினார்.

இதனால் ஆட்டத்தில் பரபரப்பு அதிகமானது. அடுத்த 2 பந்துகளிலும் 3 ரன்கள் சேர்க்கப்பட்டன. கடைசி பந்தில் 2 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் மெஹ்ரான் கான், சிறந்த நீளத்தில் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே அற்புதமாக வீசினார். டேவிட் வைஸ் மட்டையில் பந்து சிக்காத நிலையில் ஸ்டெம்புகளுக்கு நெருக்கமாக நின்ற விக்கெட் கீப்பர் நசீம் குஷியின் கைகளில் பந்து பட்டு தலைக்கு மேல் சென்றது. இதை பயன்டுத்தி பைஸ் வாயிலாக நமீபியா அணி ஒரு ரன்னை ஓடி சேர்த்தது.

20 ஓவர்களின் முடிவில் நமீபியா 6 விக்கெட்கள் இழப்புக்கு 109 ரன்களை சேர்க்க ஆட்டம் டை ஆனது. ஓமன் அணி தரப்பில் மெஹ்ரான் கான் 4 ஓவர்களை வீசி ஒரு மெய்டனுடன் 7 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்டம் டை ஆனதை தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. இதில் நமீபியா முதலில் பேட் செய்தது. அந்த அணி தரப்பில் டேவிட் வைஸ், கேப்டன் ஜெர்ஹார்டு எராஸ்மஸ் களமிறங்கினர்.

பிலால் கான் வீசிய முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டேவிட் வைஸ், அடுத்த பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார். 3-வது பந்தில் 2 ரன்களையும், அடுத்த பந்தில்ஒரு ரன்னையும் சேர்த்தார். தொடர்ந்து கடைசி இரு பந்துகளை எராஸ்மஸ் பவுண்டரிகளுக்கு விரட்ட சூப்பர் ஓவரில் நமீபியா விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் குவித்தது.

22 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஓமன் களமிறங்கியது. டேவிட் வைஸ் வீசிய முதல் பந்தில் 2 ரன் சேர்த்த நசீம் குஷி, அடுத்த பந்தை வீணடித்தார். 3-வது பந்தில் அவர், போல்டாக ஓமன் அணியின் தோல்வி உறுதியானது. ஏனெனில் கடைசி 3 பந்துகளில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவையாக இருந்தன. 4 மற்றும் 5-வது பந்துகளில் தலா ஒரு ரன் சேர்க்கப்பட்டது. கடைசி பந்தை அகிப் இல்யாஸ் சிக்ஸராக மாற்றினார். ஆனால் அது வெற்றிக்கு போதுமானதாக இல்லை. முடிவில் ஓமன் அணியால் சூப்பர் ஓவரில் 10 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது.

ஆச்சர்யமான முடிவு... சூப்பர் ஓவரை வீச நமீபியா கேப்டன் எராஸ்மஸ் பந்தை டிரம்பெல்மேனிடம் கொடுப்பார் என பலரும் நினைத்தனர். ஆனால், பல வருட அனுபவம் வாய்ந்த 39 வயதான டேவிட் வைஸ் கையில் சூப்பர் ஓவரை கொடுத்தார் எராஸ்மஸ். அவரும் கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்றி அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தார்.

ரூபன் டிரம்பெல்மேன் சாதனை: ஓமன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நமீபியா அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரூபன் டிரம்பெல்மேன் தனது அற்புதமான யார்க்கர்களால் ஆட்டத்தின் முதல் இரு பந்துகளிலும் காஷ்யப் பிரஜாபதி (0). கேப்டன் அகிப் இல்யாஸ் (0) ஆகியோரை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். இதன் மூலம் அவர். சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஒவரின் முதல் 2 பந்துகளிலும் விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். ஒமனுக்கு எதிரான ஆட்டத்தில் 4 ஒவர்களை வீசிய ரூபன் டிரம்பெல்மேன் 21 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார்

x