பூந்தமல்லி | 3 வயது மகனை ஏரியில் வீசிய தந்தை அதே ஏரியில் தற்கொலை


பூந்தமல்லி: சென்னை- போரூர் பகுதியில், தாம்பரம்- புழல் புறவழிச் சாலையில் நேற்று முன் தினம் மோட்டார் சைக்கிளில் சிறுவனுடன் ஒருவர் வந்தார். அவர், திடீரென சிறுவனை தூக்கி போரூர் ஏரியில் வீசி விட்டு, மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றார்.

இதைப் பார்த்த ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சிலர், உடனடியாக ஏரியில் நீந்தி சென்று சிறுவனை மீட்டு போரூர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, போலீஸார் நடத்திய விசாரணையில் ஏரியில் சிறுவனை வீசிவிட்டு சென்றதுசென்னை, தலைமை செயலகக் குடியிருப்பைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பதும், மனைவி பிரியாவுடன் ஏற்பட்ட தகராறில் அவரை வீட்டில் பூட்டி வைத்து விட்டு, தன் மகன் தர்ஷனை (3) தூக்கி கொண்டு, மோட்டார் சைக்கிளில் வந்து போரூர் ஏரியில் வீசி சென்றது தெரியவந்தது.

பிறகு, சிறுவன் தர்ஷனை அவரது தாய் பிரியாவிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.தொடர்ந்து, மகனை ஏரியில் வீசி விட்டு சென்ற மோகன்ராஜை தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று போரூர் ஏரியில் உயிரிழந்த நிலையில் ஆண் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடம் விரைந்த போரூர் போலீஸார், அந்த உடலை மீட்டு முதல் கட்ட விசாரணையில் ஈடுபட்டனர். அவ்விசாரணையில், உயிரிழந்த நிலையில் மிதந்தவர், 3 வயது மகனை ஏரியில் தூக்கிவீசிய தந்தை மோகன்ராஜ் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து, போலீஸார் மோகன்ராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.