நார்வே செஸ் போட்டி: அமெரிக்க வீரர் பேபியானோ கருணாவை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாதனை


ஸ்டாவங்கர் (நார்வே): நார்வேயின் ஸ்டாவங்கரில் நடைபெற்று வரும் நார்வே செஸ்போட்டியின் 5-வது சுற்றுப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அமெரிக்க வீரரும், உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான பேபியானோ கருணாவை வீழ்த்தினார். இதன் மூலம் உலக செஸ் வீரர்கள் தரவரிசை யில் முதல் 10 இடங்களுக்குள் பிரக்ஞானந்தா நுழைந்தார்.

நார்வேயிலுள்ள ஸ்டாவங்கர் நகரில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற 5-வது சுற்றுப் போட்டியில் பிரக்ஞானந்தாவும், பேபியானோ கருணாவும் மோதினர்.

இந்தப் போட்டியில் 66-வது நகர்த்தலில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். உலகத் தரவரிசையில் 2-வது இடத்திலுள்ள பேபியானோ கருணாவை வீழ்த்தியுள்ளதன் மூலம் செஸ் உலகில் கவனம் பெற்றுள்ளார் பிரக்ஞானந்தா.

இதே போட்டியின் 3-வது சுற்றின் போது முதல் நிலை வீரரும், உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்சனை (நார்வே) தோற்கடித்திருந்தார் பிரக்ஞானந்தா என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் உலகத் தர வரிசையில் முதல் 10 இடங்களுக்குள் பிரக்ஞானந்தா நுழைந்தார். 5-வது சுற்றில் பெற்ற வெற்றியின் மூலம் பிரக்ஞானந்தா தற்போது 8.5 புள்ளிகளுடன் இந்தத் தொடரில் 3-வது இடத்தில் உள்ளார்.

முதலிடத்தில் ஹிகாரு நகமுராவும் (10 புள்ளிகள்), 2-வது இடத்தில் மாக்னஸ் கார்ல்சனும் (9 புள்ளிகள்) உள்ளனர். நேற்று நடைபெற்ற மகளிர் பிரிவு ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, சீனாவின் டிங்ஜி லீயை தோற்கடித்தார். இதன் மூலம் கிடைத்த புள்ளியுடன் வைஷாலி 10 புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

x