T20 WC | முதல் ஆட்டத்தில் கனடாவை வீழ்த்தியது அமெரிக்கா


டல்லாஸ்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் கனடா அணியை வீழ்த்தியுள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியானது அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காலை டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம் டல்லாஸ் நகரிலுள்ள கிராண்ட் பிராயரி மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் விளையாடிய கனடா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆரோன் ஜான்சனும், நவ்நீத் தலிவாலும் அதிரடியாக விளையாடினர். ஆரோன் ஜான்சன் 16 பந்துகளில் 23 ரன்களும் (5 பவுண்டரிகள்), நவ்நீத் தலிவால் 44 பந்துகளில் 61 ரன்களும் (3 சிக்ஸர், 6 பவுண்டரிகள்) குவித்தனர்.

மற்றொரு வீரரான நிக்கோலஸ் கிர்டான் 31 பந்துகளில் 51 ரன்களை விளாசினார். பர்கத் சிங் 5, ஸ்ரேயாஸ் மோவ்வா 32, தில்பிரீத் சிங் 11, தில்லான் ஹெய்லிகர் 1 ரன் எடுத்தனர். அமெரிக்க அணி தரப்பில் அலி கான், ஹர்மீத் சிங், கோரி ஆண்டர்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.

பின்னர் 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்க அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்டீவன் டெய்லர் 0, மோனங்க் பட்டேல் 16 ரன்களில் வீழ்ந்தபோதும் அதன் பின்னர் வந்த ஆன்ட்ரீஸ் கவுஸ் 65 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரரான ஆரோன் ஜோன்ஸ் 40 பந்துகளில் 94 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ஸ்கோரில் 4 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் அடங்கும். கோரி ஆண்டர்சன் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில் 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்து அமெரிக்க அணி வெற்றி கண்டது. கனடா அணி தரப்பில் கலீம் சனா, தில்லான் ஹெய்லிகர், நிகில் தத்தா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைப் பறித்தனர். 94 ரன்கள் குவித்த ஆரோன் ஜோன்ஸ்(அமெரிக்கா) ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

x