தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டி: 3 தங்கம் வென்ற மதுரை மாணவ, மாணவியர்!


மதுரை: மதுரையைச் சேர்ந்த 7 மாணவ - மாணவியர் தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பாக தேசிய அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு 3 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களை வென்றனர்.

தேசிய அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனே ஸ்ரீ சத்ரபதி சிவாஜி உள் விளையாட்டு அரங்கத்தில் மே 21 முதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கலந்து கொண்டனர்.

இதில் பாய்ன்ட் ஃபைட்டிங், லைட் காண்டாக்ட், கிக் லைட், மற்றும் மியூசிக்கல் ஃபார்ம் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் மதுரையைச் சேர்ந்த 7 மாணவ மாணவியர் தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பாக கலந்து கொண்டு 3 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களை வென்றனர்.

பாயின்ட் ஃபைட்டிங் பிரிவில் ராஜவர்ஷினி 28 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கமும், சாரா 30 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றனர். டீம் பாயின்ட் ஃபைட்டிங் பிரிவில் சாரா தங்கப்பதக்கம் வென்றார். கிக் லைட் பிரிவில் ஜெய்சிம்மவர்மன் 57 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

மியூசிக்கல் ஃபார்ம் பிரிவில் ஹர்ஜித், லக்சன் வெள்ளி பதக்கமும் கிரியேட்டிவ் ஃபார்ம் பிரிவில் நிகில் வெண்கல பதக்கமும் வென்றனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களை மதுரை மாவட்ட அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்க தலைவர் நாராயணன், செயலாளர் பிரகாஷ் குமார், துணைத் தலைவர் கார்த்திக் பயிற்சியாளர்கள் முத்துக்குமார் உள்ளிட்டோர் பாராட்டினர்.