கூடலழகர் கோயில் வைகாசி பெருந்திருவிழா தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


மதுரை கூடலழகர் கோயில் வைகாசி பெருந்திருவிழாவின் 9-ம்நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: மதுரை கூடலழகர் கோயில் வைகாசி பெருந்திருவிழாவின் 9-ம் நாளான இன்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ கோஷங்கள் முழங்க வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

மதுரையில் சைவத்திற்கு மீனாட்சி அம்மன் கோயிலும், வைணவத்திற்கு கூடலழகர் கோயிலும் புகழ் பெற்று திகழ்கிறது. கூடலழகர் பெருமாள் கோயில், பாடல் பெற்ற 108 திவ்யதேசங்களில் 47-வது திருத்தலம். பெரியாழ்வாரால் பல்லாண்டு பாடப்பெற்ற தலமாகும். திருமங்கையாழ்வார் மற்றும் திருமழிசைபிரான் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமுமாகும். இங்கு சிறப்புக்குரிய அஷ்டாங்க விமானத்தின் கீழ்தளத்தில் கூடலழகர் அமர்ந்த கோலத்திலும், இரண்டாவது தளத்தில் சூரிய நாராயணர் நின்ற கோலத்திலும், மூன்றாவது தளத்தில் பாற்கடல் நாதர் பள்ளிகொண்ட கோலத்திலும் காணப்படுகிறார்.

மூன்று தளங்களும் 5 சிகரங்களும் கொண்டது அஷ்டாங்க விமானம். இதன் நிழல் தரையில் விழுவதில்லை. உற்சவராக வியூக சுந்தரராஜ பெருமாள் அருள்பாலிக்கும் சிறப்புக்குரிய தலம். கூடலழகர் கோயில் வைகாசி பெருந்திருவிழா மே 16-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினமும் காலையில் பல்லக்கிலும், மாலையில் சிம்ம வாகனம், அனுமார் வாகனம், கருடன், சேஷ வாகனம், யானை, பூச்சப்பரம், குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடந்து வருகிறது.

அதனையொட்டி 9-வது நாளான இன்று (மே 24) வெள்ளிக்கிழமை தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 5.30 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் வியூக சுந்தரராஜபெருமாள் தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகள், தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் காலை 6.30 மணிக்கு பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நிலையிலிருந்து புறப்பட்டது. பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ கோஷங்கள் முழங்க வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தேர் நிலையிலிருந்து புறப்பட்டு பாண்டிய வேளார் தெரு, தெற்கு வெளி வீதி, கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, திண்டுக்கல் சாலை, மேலமாசி வீதி வழியாக காலை 8.40 மணிக்கு மீண்டும் நிலையை அடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் உணர்ச்சிப்பெருக்கோடு வழிபட்டனர். நீர் மோர் பந்தல், எலுமிச்சை, புளியோதரை, தயிர் சாதம் ஆகியவற்றை அன்பர்கள் பக்தர்களுக்கு வழங்கினர்.

அதனைத்தொடர்ந்து 10-ம் நாள் (மே 25) எடுப்புச்சப்பரம் சப்தாவர்ணத்தில் எழுந்தருளல், திருத்தேர் தடம் பார்த்தல் நடைபெறும். 11-ம் நாள் (மே 26) காலை 10.15 மணியளவில் குதிரை வாகனத்தில் புறப்பாடாகி மேலமாசி வீதி, வக்கீல் புதுத்தெரு வழியாக வைகை ஆற்றில் வியூக சுந்தரராஜ பெருமாள் இறங்குகிறார். அதனைத் தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் லெ.கலைவாணன் தலைமையில் உதவி ஆணையர் ந.யக்ஞ நாராயணன் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.