கோவில்பட்டி கோயில் திருவிழாவில் வாளால் அடித்துக்கொண்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்!


கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே கோயில் திருவிழாவில் வாளால் தங்களைத் தாங்களே அடித்துக் கொண்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கோவில்பட்டி அருகே வானரமுட்டி தேவாங்கர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில் உள்ளது. இங்கு வைகாசி மாத பொங்கல் விழா இன்று பிற்பகல் நடந்தது. இதில், காப்புக் கட்டி விரதமிருந்த பக்தர்கள் கத்தியை போட்டு நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக விரதமிருந்த பக்தர்கள் சிவன் கோயிலில் இருந்து அம்மன் ஊர்வலத்துக்கு முன்பு வாள் கொண்டு தங்களைத் தாங்களே தாக்கி நேர்த்திக் கடன் செலுத்தியபடி சென்றனர்.

தொடர்ந்து பொதுப் பந்தலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4 மணிக்கு கயிறு குத்தி நேர்ச்சை செலுத்தும் ஊர்வலமும், சிவன் கோயில் முன்பு கரகம் விடும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.