கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்


நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம் இன்று நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, தினமும் அதிகாலை மற்றும் காலை வேளையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும், மதியம் சிறப்பு அன்னதானமும், மாலை சமய உரையும், இரவு அம்மன் வாகன வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

9ம் திருவிழாவான இன்று காலை தேரோட்டம் நடந்தது. காலை 9.30 மணிக்கு வெள்ளி பல்லக்கில் உற்சவ அம்மனை அலங்கரித்து கோவிலில் இருந்து சன்னதி தெரு, தெற்கு ரத வீதி நடுத்தெரு வழியாக தேர் நிற்கும் கீழ ரத வீதிக்கு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் அம்மனை பட்டு மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள செய்து, அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள், தீபாராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

தேரோட்ட நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கலந்து கொள்ளும் வகையில் கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு காலை 10 மணி வரை 2 மணி நேரம் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது.10ம் திருவிழாவான இன்று இரவு 9 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. கோயில் தெப்ப குளத்தில் தண்ணீர் இல்லாததால் தெப்பம் வலம் வருவதில் குழப்பம் உள்ளது. எனவே தெப்ப குளத்தின் கரை பகுதியில் தெப்பத்தை வைத்து சம்பிரதாய பூஜைகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.