பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோயிலில் கருட சேவை


பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள்கோயிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவ விழாவில், இன்று காலை நடைபெற்ற கருடசேவை நிகழ்வில், வரதராஜப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருவள்ளூர்: பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவ விழாவில், இன்று (புதன்கிழமை) கருடசேவை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் அமைந்துள்ள திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த 20-ம் தேதி வைகாசி பிரம்மோற்சவ விழா தொடங்கியது. வரும் 29-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருடசேவை இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்வில், வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட வரதராஜப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

தொடர்ந்து, கோபுர தரிசனம் நடைபெற்றது. பிறகு, கருட வாகனத்தில் வரதராஜப் பெருமாள் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரதராஜப் பெருமாளை பின்தொடர்ந்து, திருக்கச்சி நம்பிகளும் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்வுகளில், பூந்தமல்லி, திருமழிசை, ஸ்ரீபெரும்புதூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று, வரதராஜப் பெருமாளையும், திருக்கச்சி நம்பிகளையும் தரிசனம் செய்தனர்.