காஞ்சிபுரம் கருட சேவை உற்சவம்: மக்கள் கூட்டத்தால் நிறைந்த கோயில் மாநகரம்


காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் அருகே கருட வாகனத்தில் வீதியுலா வந்த வரதராஜ பெருமாள்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் கருட சேவை உற்சவம் கோலாகலமாக தொடங்கியது. இந்த கருட சேவையை காண காஞ்சிபுரம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திரண்டதால் கோயில் மாநகரமான காஞ்சிபுரம் மக்கள் தலைகளால் நிறைந்து காணப்பட்டது.

திருப்பதி, ஸ்ரீரங்கத்துக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த வைணவத் திருத்தலம் காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் கருட சேவை பிரசித்தி பெற்ற நிகழ்வு. இதில் லட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இந்த ஆண்டுக்கான வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மூன்றாம் நாள் விழான கருட சேவை உற்சவம் நடைபெற்றது. இந்த விழாவையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கருட வாகனத்தில் எழுந்தருளினார். கோயிலில் இருந்து புறப்பட்ட வரதராஜ பெருமாளுக்கு கோயில் ராஜகோபுரத்தில் தொட்டாட்சியாருக்கு காட்சி அளிக்கும் வைபவம் நடைபெற்றது.

அப்போது வரதராஜ பெருமாளை சில விநாடிகள் குடை கொண்டு மறைத்தனர். இவ்வாறு மறைக்கும் நேரத்தில் சோளிங்கரில் கருட சேவைக்கு வர முடியாத தொட்டாட்சியர் என்ற பக்தருக்கு அவர் இடத்திலேயே சென்று காட்சி அளித்ததாக கூறப்படுகிறது. இதனை நினைவு கூறும் வகையில் இந்த சேவை நடைபெற்றது.

பின்னர் அங்கிருந்து விளக்கடி கோயில் தெருவில் உள்ள ஸ்ரீதூப்புல் வேதாந்த தேசிகர் சந்திதிக்கு வரதராஜபெருமாள் அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கிருந்து பிள்ளையார்பாளையம் வழியாக கச்சபேஸ்வரர் கோயிலை வந்தடைந்தார். அங்கு அவருக்கு குடை மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் கருட வாகனத்தில் வந்த பெருமாள் சங்கர மடம் அருகே உள்ள வாகன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

வரதராஜபெருமாள் வரும் வழியெங்கும் பொதுமக்கள் அன்னதானம், நீர் மோர் தானங்களை வழங்கினர். பல்வேறு தற்காலிக கடைகள், நகரும் ஏ.டி.எம். மையங்கள் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. வழிநெடுகிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி நின்று வரதராஜ பெருமாளை வழிபட்டனர். போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் திருப்பிவிடப்பட்டன.

x