காஞ்சிபுரத்தில் இன்று கருட சேவை: 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்ப்பு


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கருட சேவை நிகழ்ச்சி இன்று (மே 22-ம் தேதி) நடைபெறுகிறது. இந்த விழாவில் 4 லட்சம் பக்தர்கள் வரை பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுவதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் காலை 4 மணி முதலே நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்கோயில் வைகாசி பிரம்மோற்சவம்கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் முக்கிய நிகழ்வான கருட சேவை மே 22-ம் தேதி (இன்று) நடைபெற உள்ளது. மே 26-ம் தேதி திருத்தேர் உற்சவமும் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.சண்முகம் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த திருவிழாவுக்காக 1,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முக்கிய இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்து சமய அறநிலையத் துறையிடம் உரிய அனுமதி பெற்ற அன்னதானம் வழங்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

போக்குவரத்தில் மாற்றம்: சுவாமி புறப்பாட்டுக்கு இடையூறு இல்லாமல் பழைய ரயில் நிலையம், புதிய ரயில் நிலையம், ஒலிமுகமது பேட்டை சந்திப்பு, ஓரிக்கை சந்திப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புறநகர் பகுதியில் அமைக்கப்படும் தற்காலிக பேருந்து நிலையங்கள் வரை மட்டுமே பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

கார் உள்ளிட்ட வாகனங்களும் சுவாமி புறப்பாடு வரும் நேரங்களில் அந்த வழிகளில் அனுமதிக்கப்படாது என்று காவல்துறை சார்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.