திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் தங்க காக வாகனத்தில் சனி பகவான் வீதியுலா


திருநள்ளாறில் தங்க காக வாகனத்தில் எழுந்தருளி சனீஸ்வர பகவான் சகோபுர வீதியுலா

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழாவில் சனி பகவான் தங்கக் காக வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

சனி பகவான் தனி சந்நிதியில் அருள்பாலித்து வரும் தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 5-ம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து, அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு வீதியுலா, தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பாள் சமேத தர்பாரண்யேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி சகோபுர வீதியுலா, தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

நேற்று முன்தினம் இரவு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தங்கக் காக வாகனத்தில் எழுந்தருளச் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சகோபுர வீதியுலா நடைபெற்றது.

இதில் நிர்வாக அதிகாரி (கோயில்கள்) அருணகிரிநாதன், தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை சிவகுருநாதன் தம்பிரான்சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.