அயோத்தி ராமர் கோயிலுக்கு 13 கிலோ வெள்ளி வில், அம்பு காணிக்கை: சங்கர மடத்தில் சிறப்பு பூஜை


அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்க உள்ள 13 கிலோ எடை கொண்ட வெள்ளி வில் அம்பை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் வழங்கிய ஆந்திர மாநில பக்தர்கள்.

காஞ்சிபுரம்: அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு ஆந்திர மாநில பக்தர்கள் வெள்ளியில் செய்யப்பட்ட 13 கிலோ எடை கொண்ட வெள்ளி வில், அம்புகளை காணிக்கையாக வழங்க உள்ளனர். இந்த வில் அம்புக்கு காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இந்த வெள்ளி வில் அம்புடன் அவர்கள் காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு வருகை தந்தனர். சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் அவற்றை வழங்கினர். இந்த வில் அம்பை மஹாபெரியவர் என்று அழைக்கப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்திலும், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்திலும் வைத்து விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு பூஜைகளை செய்தார்.

இதனைத் தொடர்ந்து ஆந்திர மாநில பக்தர்களுக்கு ஆசி வழங்கி அந்த வில் அம்பை அவர்களிடம் கொடுத்து அயோத்திக்கு வழியனுப்பி வைத்தார். அந்த வில் அம்புடன் ஆந்திர மாநில பக்தர்கள் காணிக்கையாக வழங்க அயோத்தி புறப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் சங்கர மடத்தின் மேலாளர் சுந்தேரச அய்யர் உடன் இருந்தார்.