திருச்செந்தூரில் புதன்கிழமை வைகாசி விசாகத் திருவிழா - குவியும் பக்தர்கள்


வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்.

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நாளை (மே 22) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திரளான பாதயாத்திரை பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர்.

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமான வைகாசி விசாக நட்சத்திர தினம், வைகாசி விசாக பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. விசாகத் திருநாளில் முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபடுவதற்குரிய பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த ஆண்டுக்கான வைகாசி விசாகத் திருவிழா நாளை (மே 22) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கோயிலில் நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாரதனை மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

காலை 10.30 மணிக்கு மூலவருக்கு உச்சகால அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாரதனை ஆனதும், சுவாமி ஜெயந்திநாதர் தங்கசப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் வந்து சேர்கிறார். அங்கு முனிகுமார்களுக்கு சாபவிமோச்சனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடைபெறுகிறது.

வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முருகப்பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர். மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இருந்து ஏராளமான முருக பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த பக்தர்கள் அதிகாலையில் கடல் மற்றும் நாழிகிணற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் முடி காணிக்கை செலுத்தியும், காவடி எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

நாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிய உள்ளதால், போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். வைகாசி விசாக திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், கோயில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் அறக்கவலர்கள், திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.