பழநி கோயிலில் கொடியேற்றத்துடன் வைகாசி விசாக திருவிழா தொடக்கம்


சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி சமேதவள்ளி, தெய்வானை. (அடுத்தபடம்) பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்றம். படங்கள்: ஆ.நல்லசிவன்

பழநி: பழநியில் வைகாசி விசாகத் திருவிழா நேற்று கொடியேற்றத் துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 22-ம் தேதி நடைபெறுகிறது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரிய நாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு சேவல், மயில், வேல் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு நேற்று காலை 9.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக, முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றன.

கொடியேற்ற நிகழ்ச்சியில் கோயில் துணை ஆணையர் வெங்கடேஷ், கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹர முத்து மற்றும் முக்கியப் பிரமுகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். திருவிழாவின் 10 நாட்களும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மே 21-ம் தேதி திருக்கல்யாணமும், விழாவின் முக்கிய நிகழ்வான மே 22-ம் தேதி காலை 11.30 மணிக்கு மேல் தேரேற்றமும், மாலை 4.30 மணிக்கு மேல் தேரோட்டமும் நடைபெற உள்ளது. மே 25-ம் தேதி காலை திருவூடல் நிகழ்ச்சி, இரவில் கொடியிறக்குதலுடன் விழா நிறைவடைகிறது.

x