சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயிலில் தேர்த் திருவிழாவையொட்டி கொடியேற்றம்


சேலம் கோட்டை அழகிரிநாத பெருமாள் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டத்தையொட்டி கோயிலில் நேற்று கொடியேற்றப்பட்டது. படம்: எஸ்.குரு பிரசாத்.

சேலம்: சேலம் கோட்டை அழகிரிநாத பெருமாள் கோயிலில் வைகாசி தேர்த் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடந்தது.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே பழமை வாய்ந்த கோட்டை அழகிரிநாத பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் தேர்த் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டு தேர்த் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. கோயிலில் நேற்று தேர்த் திருவிழாவையொட்டி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக அழகிரிநாதர் மற்றும் தாயாருக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமிக்கு பட்டாடை உடுத்தப்பட்டு, தங்க கிரீடங்கள் சாத்தி பல்வேறு வாசனை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

பின்னர் புஷ்ப பல்லக்கில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும், மங்கள வாத்தியம் இசைக்க கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, கோவிந்தா முழக்கமிட்டு வழிபட்டனர்.