திருமலை வையாவூர் கோயிலில் பந்தக்கால் நடும் விழா


மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த திருமலை வையாவூர் கிராமத்தில் அமைந்துள்ள தென்திருப்பதி என போற்றப்படும் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் ஜூன் 17-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், அதற்கான பந்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த திருமலை வையாவூர் கிராமத்தில் தென்திருப்பதி என போற்றப்படும் அலர்மேல்மங்கை தாயார் சமேத  பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

இம்மலைக் கோயிலில், கடந்தஆண்டு உபயதாரர்கள் உதவியுடன் ரூ.1.36 கோடி மதிப்பில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது, திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளதால் ஜூன் 17-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் நடும் விழா மலைக்கோயிலில் நேற்று நடைபெற்றது. இதில், கோயில் செயல் அலுவலர் மேகவண்ணன் மற்றும் அறங்காவலர்கள் குழுவினர், பக்தர்கள் என பலர்கலந்துகொண்டனர். அர்ச்சகர்களின் சிறப்பு ஆராதனைகளைத் தொடர்ந்து பந்தக்கால் நடப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள், சுமங்கலி பெண்கள் பங்கேற்றனர்.